செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சித்தேசன்




அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள்(நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்.                                                                 
- ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)
இளமைக் காலத்தில் விடுமுறை நாட்களில் கிராமத்திலுள்ள தாய்வழித்தாத்தா வீட்டிற்குச் செல்வது கொண்டாட்டமான விசயம். அந்த நாட்களை இப்போது நினைக்கும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பெரிய காரை வீடானாலும் சின்ன குடிசை வீடானாலும் திண்ணையோடிருக்கும் வீடுகள், வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்கள், ஓசிக்கஞ்சி எனக் கேலி செய்யும் மாமா முறையினர், கிணற்றடியின் குளுமை என கிராமத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டேயிருக்கும். கிராமத்தின் நினைவுகளையூட்டும் ந.முருகேச பாண்டியனின் ‘கிராமத்துத் தெருக்களின் வழியே’ நூல் நல்லதொரு ஆவணம்.
கிராமங்களில் வெள்ளுடை உடுத்தி மணியாட்டிக்கொண்டு வரும் சாமியார்களை இளம் வயதில் பார்த்திருக்கிறேன். மணியாட்டிக்காரர்கள் மணியை தலைகீழாக கவிழ்த்தி அதில் கம்பை வைத்து சுழற்றும் போது வரும் மணியோசையும், மணியாட்டிக்காரர்கள் பாடும் பாட்டும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எங்கம்மா கூறினார். அந்தப் பாட்டில் நெல்லின் பலரகப்பெயர்களை சேர்த்து பாடுவதையும் குறிப்பிட்டார்.
மணி
சமீபத்தில் மதுரை கூடல்நகர் அருகே நானும் நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தபோது மணியாட்டிக்காரர்களை பார்த்தோம். அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக இப்படி மணியடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று நெல், பணம் காணிக்கையாக பெறுவதாகக் கூறினார். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் ஒன்று இருக்கிறதாம். தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பெரியவர் கூறினார்.
‘அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்’ என அன்பேசிவத்தில் இறுதியில் கமல்ஹாசன் சொல்லும் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்கள் மணியாட்டிக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குறித்து விரிவாக பதிலிடுங்களேன்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக