ஆராய்ச்சி என்ற பெயரில் எப்படியெல்லாம் விபரீதமாகப் பண்ணியிருக்கிறார்கள் என்பதற்கு ஒன்று சொல்கிறேன்;மஹேந்திர வர்மாவுக்கு அநேகப் பட்டப் பெயர்கள் உண்டு. அதில் 'ஸங்கீர்ண ஜாதி'என்று ஒன்று. அப்படியென்றால் 'கலப்பு ஜாதி'. இந்த நேர் அர்த்தத்தை வைத்துக் கொண்டு நான் சொல்கிற ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணினார்களென்றால் 'மஹேந்திர வர்மா சுத்த க்ஷத்திரியரில்லை;கலப்பு ஜாதியில் பிறந்தவன் அதில் பெருமையும் பட்டவன். அதனால் சாஸனங்களில் அவனே அப்படி பிருதம் (விருது) போட்டுக் கொண்டிருக்கிறான் என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஜாதிமுறையைப் பற்றி இன்றைக்கு என்ன அபிப்பிராயமிருந்தாலும் நம்முடைய பழைய ராஜாக்கள் மநு தர்ம சாஸ்திரப்படி வர்ணாச்ரமங்களைப் பரிபாலித்து வந்ததாகவே கல்வெட்டுகள், செப்பேடுகள், புலவர்களின் பாடல்கள் எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அப்படிப்பட்ட காலத்தில் 'பாரத்வாஜ'கோத்திரக்காரர் என்று தங்களை பெருமையோடு சொல்லிக்கொண்ட பல்லவ வம்ஸ ராஜா ஒருத்தன் தன்னைக் கலப்பு ஜாதியில் பிறந்தவன் என்பதை ஒரு பிருதமாக ஒருநாளும் போட்டுக் கொள்ள மாட்டான். இப்போது நேருவை ப்ராம்மணோத்தமர், வர்ணாச்ரம ரக்ஷகர் என்று சொன்னால் அவருக்கு எவ்வளவு கோபம் வரும்?அப்படித்தான் பதிமூன்று ஸெஞ்சுரிக்கு முன்னால் இருந்த மஹேந்த்ர வர்மாவுக்கு அவன் நிஜமாகவே கலப்பு ஜாதியாயிருந்திருந்தால்கூட அப்படிச் சொன்னால் கோபம்தான் வரும். அவன் எழுதியுள்ள மத்த விலாஸ ப்ரஹஸனம் என்ற ஹாஸ்ய நாடகத்தில் முடிவாக பரத வாக்யம் என்று மங்கள ஸ்லோகம் சொல்கிறபோது, ப்ரஜைகளின் க்ஷேமத்திற்காக அக்னி பகவான் ஆஹ§திகளை தேவர்களுக்குக் கொண்டுபோய்க் கொடுத்துக் கொண்டிருக்கட்டும். அதாவது, என் ராஜ்யத்தில் யாக யஜ்ஞங்கள் நடந்து கொண்டிருக்கட்டும். ப்ராம்மணர்கள் வேதத்தை நன்றாக அப்யாஸம் பண்ணிக் கொண்டிருக்கட்டும். பசுக்கள் பாலைப் பொழிந்து கொண்டிருக்கட்டும் என்கிறான். க்ஷீர ஸ்ம்ருத்தியை (பால் செழிப்பைச் சொல்வதும் அக்னி ஹோத்திரத்துக்கு அது பிரயோஜனப் படுவதால்தான். கோ ப்ராஹ்மணேப்யோ என்றும் அந்தணர் (வானவர்) ஆனினம் என்று சேர்த்துச் சொல்வது அவர்களிடம் மட்டும் பக்ஷபாதத்தினால் அல்ல!ப்ராம்மணன், பசு இரண்டும் யாகத்திற்கு அவசியமாயிருப்பதால் அப்படிச் சொல்வது. இப்படி வைதிக ஆசரணைகளைப் போற்றியவன் தன்னை ஸங்கர (கலப்பு) ஜாதிக்காரன் என்று டைட்டில் போட்டுக் கொண்டிருக்கவே மாட்டான்.
பின்னே ஸங்கீர்ண ஜாதி என்றால் என்ன?புரியாமல் கஷ்டப்படுத்திற்று. அப்புறம் ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்கள் புரிய வைத்தார்கள்.
மஹேந்திர வர்மா ஸங்கீதத்தில் மஹா நிபுணானாயிருந்து புதுக்கோட்டை கிட்ட குடுமியா மலையில் ஸங்கீத விஷயமாக புதிய கல்வெட்டு, லோகத்திலேயே அதுமாதிரி ஒன்று இல்லை என்னும்படிப் பொறித்து வைத்தவன். அதனால் ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்கள் இந்த டைட்டிலுக்கு ஸங்கீத சாஸ்திரத்தை வைத்து அர்த்தம் பண்ணினார்கள். தாளங்களில் கலப்பு வகையாக ஸங்கீர்ண ஜாதி என்று ஒன்று உண்டு. அதில் கெட்டிக்காரனாக, அல்லது அதைக் கண்டு பிடித்தவனாக அவன் இருந்திருப்பான். அதனால் அப்படி டைட்டில் என்று சொன்னார்கள். எனக்கும் ஆறுதலாக இருந்தது. சாஸ்த்திராபிமானமுள்ள ஒரு ராஜா தன்னைக் கலப்பு ஜாதிக்காரனென்று டைட்டிலே போட்டுக் கொண்டு ப்ரகடனப்படுத்தினான் என்கிறார்களே என்று வருத்தப்பட்டது ஸமாதானமாயிற்று.
அப்புறம் அந்த ஸமாதானம் மறுபடி குலைத்து போயிற்று. ஸங்கீத ரிஸர்ச்காரர்களிலேயே சில பேர் இன்னும் ஆழமாகப் பார்த்து ஸங்கீர்ண ஜாதித் தாளம் தற்போது இருக்கிற தாள முறையில் வருவதே. இந்த முறை தோன்றி 500 வருஷத்துக்குள்தான் ஆகிறது. 1300 வருஷம் முந்தி இருந்த மஹேந்த்ர வர்மா அதை ஒருகாலும் குறிப்பிட்டிருக்க முடியாது என்று நிறைய ஆதாரம் காட்டிச் சொன்னார்கள்.
இதென்னடா?என்று மறுபடி விசாரமாயிற்று.
மஹேந்திர வர்மா ரொம்ப வேடிக்கைப் பிரியன், witty .தன்னை பரிஹாஸம் பண்ணிக் கொள்கிற மாதிரிக்கூட டைட்டில்கள் போட்டுக்கொண்டவன். அதற்கேற்ற, விநோதமாக, பல தினுஸாக இருக்கறதுதான் தன் ஸ்வபாவம் என்று தெரிவிப்பதற்காக 'விசித்ர சித்தன்'என்றே ஒரு பிருதம் போட்டும் கொண்டவன். இன்னொரு பக்கம் இஷ்ட-துஷ்ட-ப்ரஷ்ட சரிதன் என்றும் போட்டுக் கொண்டிருக்கிறான்.
இஷ்ட சரிதன் ஸரி. எல்லோரும் இஷ்டப்படும் படியான நடத்தை உள்ளவனென்று அதற்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். சத்ருக்களிடமும், குற்றவாளிகளிடமும் ரொம்பக் கடுமையாக இருப்பவன் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ப்ரஷ்ட சரிதன் என்பதை எப்படி நல்லதாக அர்த்தம் பண்ணுவது?ஆனாலும் அதையும் டைட்டிலில் சேர்த்துக் கொண்டிருக்கிறான். வாஸ்தவத்தில் அவன் சரித்திரத்தைப் பார்த்தால் 'பிரஷ்டன்'என்னும்படி எதுவுமே இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே நம்மை மட்டமும் தட்டிக் கொள்வோமே!பட்டங்கள் உயர்வாகப் போட்டுக் கொள்வது எல்லா ராஜாக்களும் செய்வதுதான். நாம் அவர்களில் ஒருத்தனாக இல்லாமல் unique ஆக இருக்கிற விசித்ர சித்தன் அல்லவா?அதனால் மட்டந்தட்டிக் கொண்டும் சிலது போட்டுக் கொள்வோம் என்று பண்ணினது போல இருக்கிற விசித்திர சித்தன் அல்லவா?அதனால் மட்டந்தட்டிக் கொண்டும் சிலது போட்டுக் கொள்வோம் என்று பண்ணுனது போல இருக்கிறது. ராஜா என்றால் இல்லாத உசத்தியெல்லாம் கற்பித்து நிறையப் பட்டம் போட்டுக் கொள்வது என்று வழக்கமாயிருந்தால், தானும் அப்படிப் போட்டுக் கொண்டபோதே, அந்த வழக்கத்தை parody -யும், அதாவது நையாண்டியும், செய்கிற விதத்தில் இப்படி மட்டமான விஷயத்தையும் போலிருக்கிறது. நையாண்டி பண்ணுவதில் அவன் எத்தனை சதுரன் என்பதற்கு அவன் எழுதின மத்த விலாஸம் என்ற ப்ரஹனதத்தை அதாவது farce என்கிறார்களே, அப்படிப்பட்ட கேலி நாடகத்தைப் பார்த்தாலே போதும். அந்த மனப்போக்கில்தான் அவன் மற்ற ராஜாக்களெல்லாம் தங்கள் வம்ஸத்தைப் பற்றி ஆஹா, ஊஹ¨ என்று சொல்லிக்கொண்டு, தாங்களே அப்பேர்ப்பட்ட வம்ஸத்தின் சூடாமணி, தினமணி, சிந்தாமணி என்றெல்லாம் பட்டம் போட்டுக் கொள்கிற வழக்கத்தைக் கேலி பண்ணி, நான் கலப்பு ஜாதி என்று இல்லாததைச் சொல்லி ஒரு டைட்டில் போட்டுக் கொண்டான் போலிருக்கிறது. என்று ஒரு மாதிரி என்னை ஸமாதானப் படுத்திக் கொள்ளப் பார்த்தேன். ஆனாலும் முழுக்க முழுக்க ஸமாதானமாகவில்லை.
வர்ணாச்ரம விபாகங்கள் (பிரிவினைகள்) இல்லாத ஜைன மதத்தைத்தான் முதலில் அவன் தழுவியிருந்தான். அப்பர் ஸ்வாமிகளும் நடுவில் சில காலம் அந்த மதந்திலிருந்துவிட்டு அப்புறம் வைதிக மதத்துக்குத் திரும்பினவர் தான். அதற்காக அவன் படாத பாடு படுத்திவிட்டு, அது ஒன்றும் அவனைத் தொடவில்லை என்று அற்புதங்களுக்கு மேலே அற்புதமாகப் பார்த்துவிட்டு, அப்புறம் தானே வைதிக மதத்தைத் தழுவி விட்டான். இப்படிப்பட்ட புது கன்வெர்ட்கள்தான் எப்போதும் தீவிரமாயிருப்பது. அப்படியிருக்க இவன் நையாண்டியாகக்கூடத் தன்னை "ஸங்கீர்ண ஜாதிக்கார" னாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போயிருப்பானா என்ற கேள்வி தோன்றிக் கொண்டேயிருந்தது. 'பிரஷ்டன்'என்று சொல்லிக் கொண்டதுகூட ஒரு காலத்தில் தான் 'வேத பாஹ்யனாக' (வேத வழிக்குப் புறம்பாக) வேறு மதத்தில் இருந்ததை 'ஹின்ட்'பண்ணுவதற்கும் இருக்கலாம். ஸங்கீர்ண ஜாதிக்கு அடிப்படைக் கூடக் காரணம் காட்டுவதற்கில்லலையே என்று யோஜித்துக்
கொண்டிருந்தேன்.
முடிவாக, புதிருக்கு 'ஸொல்யூஷனும்'பிற்பாடு கிடைத்தது. ஸங்கீத ஆராய்ச்சிக்காரர்களேதான் நன்றாக அலசிப் பார்த்து இப்படி தீர்மானமாக 'ஸால்வ்'பண்ணிக் கொடுத்தார்கள். என்ன சொன்னார்களென்றால்,
'ஸங்கீர்ண ஜாதி'என்பதில் ஜாதி என்று வருவது ராகத்தைக் குறிப்பதே தவிர, caste -ஐ இல்லை என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். பரத சாஸ்திரத்திலேயே ராகம் என்ற
பெயரில்லை. ஜாதி என்றுதான் இருக்கிறது. மஹேந்திர வர்மாவுக்கு சுமார் நூறு வருஷம் முன்னாலிருந்த 'மதங்கர்தான் ராகம்'என்ற பெயரைக் கொண்டுவந்தார். அவருக்கப்புறமும் கொஞ்ச காலம் பழைய பேர் எடுபட்டுப் போகாமல் இரண்டு பேரும் வழங்கி வந்திருக்கிறது. மதங்கர் ராகங்களில் ஸங்கீர்ணம் என்கிற ஒரு கலப்பு தினுஸைக் கொல்லியிருக்கிறார். மஹேந்திர வர்மா இப்படிப்பட்ட கலப்பு ராகங்களை ஸ்ருஷ்டி பண்ணுவதில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருந்தானென்று அவனுடைய 'குடுமியாமலைக் கல்வெட்டில்'கொடுத்துள்ள 'ஸ்கேல்' (ஸ்வரக்கிரமம்) களிலிருந்து நிரூபணமாகிறது. அதை வைத்துத்தான் 'ஸங்கீர்ண ஜாதி'என்று பட்டம் பேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற ஆராய்ச்சிக்கு சுபமான முடிவு கட்டினார்கள்.
ஸங்கீர்ண ஜாதி அதாவது கலப்பு ராகம் என்னவென்று அவர்கள் காட்டியிருப்பதில் எனக்கு புரிந்த மாட்டில் சொல்கிறேன். இப்போது மேள (கர்த்தா) ராகம் என்று எழுபத்திரண்டை வைத்து, அவற்றிலிருந்தே பாக்கி அத்தனை ராகங்களும் வந்திருப்பதாக 'க்ளாஸிஃபை'செய்திருக்கிறார்கள். அந்த 72 ராகங்களை இரண்டு பெரிய டிவிஷன்களாகப் பிரித்திருக்கிறது. ஸப்த ஸ்வரங்களில் நடுவவே வரும் 'ம'வில் இரண்டு தினுஸு இரண்டில் தாழக்க (தாழ்வாக) இருப்பது சுத்த மத்யமம் - சங்கராபரணத்தில் வருகிற 'ம' (த்யமம்) தூக்கலாக இருப்பது ப்ரதி மத்யமம் கல்யாணியில் வருவது. இப்படி இரண்டு விதமாக உள்ள மத்யம வித்யாஸத்தை வைத்தே 72 மேளங்களை சுத்த மத்யம ராகங்கள் 36, ப்ரதி மத்யம ராகங்கள் 36 என்று இரண்டு டிவிஷன்களாகப் பண்ணியிருப்பது. கர்நாடக சங்கீதம் இப்போது இருக்கிற முறைகளிலும் சரி, அதற்கு ஆதாரமாகத் தேவார காலம் முதலானவற்றிலிருந்த தமிழ்ப் பண்களின் முறைபாட்டிலும் சரி. எந்த ஒரு ராகத்திலும் இரண்டு மத்யமங்களும் வராது. 'ம'மாதிரியே 'ரி','க','த','நி'ஆகிய ஸ்வரங்களிலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வகை உண்டு. இவற்றிலே ஒரு ராகத்தின் ஆரோஹணத்தில் (ஏறு வரிசையில்) ஏதோ ஒரு வகையான 'ரி','க','த','நி'வரும் ராகங்கள் அநேகமிருக்கின்றன. ஆனால் நம்முடைய தக்ஷிண தேச ஸங்கீதத்தில் வரும் ராகங்களில் மத்யமத்தில் மட்டும் வித்யாஸமில்லாமல், (ஏறு வரிசையில்) போகும்போதும் (இறங்கு வரிசையில்) வரும் போதும் ஒரே 'ம'தான் வரும். ஒரு ராகமென்றால் அது ஒன்று சுத்த மத்யம ராகமாக இருக்கும். இரண்டும் கலந்த ராகம் - அதாவது மத்யமத்தில்¢ 'ஸங்கீர்ண'மாக இருக்கிற ஜாதி கிடையாது.
ஆனால் இப்படிப்பட்ட இரட்டை மத்யம ராகங்களையும் மஹேந்திர வர்மா ஸ்ருஷ்டித்திருக்கிறான். அவன் கல்வெட்டில் கொடுத்திருக்கிற ஏழு ராகங்களிலுமே இரண்டு மத்யமங்களும் வருகின்றனவாம். அதனால்தான் அவனுக்கே ஸங்கீர்ண ஜாதி என்று பட்டப் பேர்.
அவனுடைய 'ஸங்கீக'வழியை அப்புறமும் தக்ஷிணத்தில் பின்பற்றவில்லை. ஹிந்துஸ்தானி ஸங்கீதத்தில்தான் இரண்டு மத்யமங்களும் வரும் ராகங்கள் இருக்கிறனவென்றும், அவை ரொம்பவும் 'ரஞ்ஜக'மாக இருப்பதால் பிற்காலத்தில் நம்முடைய ஸாஹித்ய கர்த்தாக்களும் வித்வான்களும்கூட அப்படிப்பட்ட வடக்கத்தி ராகங்களில் சிலதை எடுத்துக் கொண்டிருக்கிறார்களென்றும் தெரிந்து கொண்டேன்.
ஆராய்ச்சி என்ற பெயரில் நவநாகரீகக் கொள்கைகளைப் பூர்விகர்கள் மேல் அபிப்ராயத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது கலப்பு மனம் உயர்ந்த
விஷயமாக சில பேருக்கு இருப்பதால் என்றைக்கோ இருந்த மஹேந்திரவர்மாவைக் கலப்பு ஜாதிக்காரர்களாகியதாகச் சொன்னேன். இப்படி ஒன்றுதான் அவனுடைய பிள்ளைக்கு ஸேநாதிபதியாயிருந்த மாமாத்திரப் பரஞ்ஜோதியை இன்றைக்குச் சில பேருக்குத் தனித் தமிழ்ப் பாரம்பர்யம் காட்டுவதில் ஆசை இருப்பதால் தமிழ்நாட்டு வேளாளராக்கியிருப்பது.
நன்றி:காஞ்சி காம கோடி பீடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக