ஸ்ரீகண்டியை நான் முதலில் பார்த்தது மத்திய ஜாவாவின் முக்கிய நகரான செமராங்கின் (Semarang) அஹமத்யானி விமானநிலையத்தின் உள்ளே கலைப்பொருள்களை விற்கும் ஒரு கடையில். 1996 மே மாத இறுதியில் இந்தோநேசியாவில் வேலைக்குப் போன புதிதில் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆலைகளைக் கொண்டிருந்த என் கம்பெனியில் அறிமுகப்படலம் என்று ஓரியன்டேஷனுக்காக சுற்றிக் கொண்டிருக்கையில்.
போர்க்கோலத்தில் ஓர் இளைஞன் வில்லேந்திய அழகிய இளம்பெண்ணைத் தழுவியவாறு தொடையில் அமர்த்தி நிற்கும் அந்த வினோத பொம்மையைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். உடன் அருகில் வந்த விற்பனைப்பெண் வாங்குகிறீர்களா என்று வினவ விலை மலைக்கும்படி இருந்ததால் மறுத்தாலும் இதில் இருப்பது யார் என்று கேட்டேன்.
அர்ஜுனனும் ஸ்ரீகண்டியும் என்றாள் அந்தப்பெண். அட சிகண்டி!
சிகண்டியா என்று அதிசயித்துக் கேட்க ‘ஸ்ரீகண்டி! அர்ஜுனன் மனைவி’ என்றாள்.

சிகண்டி அர்ஜுனன் மனைவியா! இது என்னடா நான் அறிந்திராத பாரதக்கதையாய் இருக்கிறதே என்று திகைத்து நின்றேன்.
பின்னர் ஜாவாவில் நான் வாழ்ந்திருந்த பத்துவருடங்களில் அந்த நாட்டின் கவி என்ற பண்டைமொழியில் எழுதப்பட்ட ஜாவானிய மஹாபாரதம் நான் அறிந்திராத அதன் பல கிளைக்கதைகளுடன், சிகண்டி, அரவான், கடோத்கஜன், அபிமன்யு, சாம்பன் என்று அதிநுணுக்கமாய் ஒவ்வொரு பாத்திரத்துடனும் விரிய விரிய வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருந்தது.
இன்று அம்பையின் கதையை
ஜெயமோகனின் வெண்முரசு மகாபாரத நாவலில் படித்த உணர்வு மிகுதியில் ஜாவானிய ஸ்ரீகண்டி என்னை எழுதத்தூண்டினாள்.
அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் ஸ்ரீகண்டியின் கதையைத்தான்.
நம்மூரில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி என்றால் ஒட்டுமீசை பொருத்தி கோட், தலைப்பா சகிதம் பாரதியாகவோ, கோமணத்தைக் கட்டி கையில் வேலைக் கொடுத்து முருகனாகவோ எளிதாய் வேடம் கட்டுவதைப் போல் ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு.
*****
ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்.
யாகசாலை அக்கினியில் திரௌபதியும், புகையில் திருஷ்டத்யும்னனும் தோன்றிய பின்னர் மன்னன் துருபதராஜனுக்கும் கந்தவதிக்கும் இயல்வழியில் பிறக்கும் மகள் சிகண்டினி. அவள் பிறந்தபோதில் ‘இந்தக்குழந்தை பீஷ்மரைக் கொல்லவே பிறந்திருப்பவள். இவளை ஆணாகவே வளர்த்திடுக’ என்று தேவதைகள் சொல்ல அதைக் கேட்டஞ்சும் மன்னன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாது அவளை வளர்க்கிறான்.

சிறுவயதிலிருந்தே அஸ்திரப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிகண்டினி ஓர் ஆணைப் போலவே வளர்கிறாள். மணம்முடிக்கும் பருவம் வருகையில் ஆண்தன்மையே மிகுந்திருக்கும் சிகண்டினி ஒரு பெண்ணையே விரும்பி மணக்கிறாள். மணநாளிரவில் கணவன் ஆணல்லன் என்று மனைவிக்குத் தெரியவந்து அழுதுபுலம்ப, சிகண்டினி அவளை விடுத்து வனவாசம் செல்கிறாள்.
வனத்தில் திரிந்திருக்கையில் யட்சன் ஒருவன் இரக்கம் கொண்டு சிகண்டினிக்கு ஆணுறுப்பைத் தந்து சிகண்டியாக்கி, விரும்புகையில் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் வரத்தையும் நல்கி, காமக்கலையின் நுணுக்கங்களையும் சொல்லித் தருகிறான். வீடு திரும்பும் சிகண்டி மனைவியுடன் இல்லறத்தைத் தொடர்ந்து நடத்துகிறான்.
பின்னர் அண்ணன் திருஷ்டத்யும்னன் அஸ்தினாபுரியில் துரோணரிடம் வில்வித்தை கற்கச் செல்கையில் உடன் செல்லும் சிகண்டி அங்கு அழகன் அர்ஜுனனைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு மீண்டும் பெண்ணாகிறாள். அர்ஜுனனிடம் பயிற்சிபெறும் அபிமன்யு முதலானோருடன் சேர்ந்து தானும் வில்வித்தை கற்கிறாள். சடுதியில் கற்றுத் தேரும் சிஷ்யை சிகண்டினியின் திறமையால் கவரப்படும் அர்ஜுனன் ஒருகட்டத்தில் காதல்வயப்பட்டு அவளை மணந்து கொள்கிறான்.
பின் சிகண்டினி வீடுதிரும்பி சிகண்டியாகி ஆண்வேடம் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து, பாரதப்போரில் பீஷ்மரைப் பழிவாங்கவே மீண்டும் அர்ஜுனனிடம் சேர்வதற்குப் பெண்ணாகித் திரும்பி வருகிறாள்.

அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
குருக்ஷேத்திரப்போரில் ஸ்ரீகண்டி எவ்வாறு பீஷ்மரை வீழ்த்துகிறாள் என்பதில்தான் அவள் ஜாவாவின் நாயகி ஆகி நிற்கிறாள்.
முற்பிறவியில் தன்னை அலைக்கழித்த வன்மத்தை மறக்காமல் காங்கேயன் பீஷ்மரை இப்பிறவியில் வென்றழிக்க காங்கேயன் முருகனையே இஷ்டதெய்வமாய்க் கொண்டு கடும்தவம் மேற்கொள்கிறாள் ஸ்ரீகண்டி.
தவத்தால் உருவேற்றப்பட்ட தாந்த்ரீக பலம் (Thaumaturgic) கொண்ட ஸ்ரீகண்டியின் வில் ஜாவானியக் கூத்துகளில் வியந்தோதிப் பாடல்பெறும் தனிச்சிறப்புடையது. விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி. அதிலிருந்து எய்யப்படும் அம்பு தார்மீகத்தில் பிறழாது நிற்பவன், நியாயவான் எனில் கொல்லாது திரும்பும். ஆனால் தர்மத்திலிருந்து சற்றும் பிறழ்ந்தோனைத் தவறாது கொல்லும்.

இங்குதான் இந்திய ஜாவானிய பாரதக்கதைகளிடையே முக்கியமான வேறுபாட்டினைக் காண்கிறேன். இந்தியப்பதிப்புகள் எல்லாவற்றிலும் பீஷ்மர் 100 விழுக்காடு அப்பழுக்கில்லா அறவானாகவும், தம் சாவினை தாமே முடிவு செய்யும் வரவானாகவும், அம்பையை எதிர்கொள்ள விருப்பமின்றி விட்டுக்கொடுக்கும் சுத்தவீரனாகவும் காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் – ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் – அர்ஜுனனைப் பின்தள்ளி, நிராயுதபாணியாய் நிற்கும் பீஷ்மரைக் கொல்லப்பார்க்கும் சற்றே வில்லத்தனம் கலந்த நபும்ஸகன் சிகண்டியின் பிம்பமே என்னுள் இருந்தது. இந்தியர் பலருக்கும் அவ்விதமே இருக்கலாம். மேலும் பீஷ்மர் தம்மை வீழ்த்தும் அம்புகளை உருவி எடுத்துப்பார்த்து இவை அர்ஜுனன் எய்தவையே என்று மகிழ்ந்து உயிர்வாழும் வேட்கை விடுத்துப்பின் தேரிலிருந்து வீழ்வது போல் கதை செல்லும்.
ஜாவானியப் பதிப்பில் அம்பைக்கு பீஷ்மரிலும் உயர்ந்த தேவிவடிவம் தந்து அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எய்யும் ஹ்ருஸாங்கலியின் அம்பே பீஷ்மரை வீழ்த்தித் தீர்ப்பையும் நிறுவுகிறது.
அதனால்தான் அவள் நாயகி! ஜாவானிய, சுந்தானிய, இந்தோநேசிய மொழிகளில் நாயகி என்றாலே ஸ்ரீகண்டிதான். ஐயம் கொண்டோர் கூகிள் மொழிபெயர்ப்பானைச் சொடுக்கவும் –
http://translate.google.com/#id/ta/srikandi
மேலே மடித்து நிமிர்த்தக்கூடிய ஹ்ருஸாங்கலி என்ற அம்பாதேவியின் வில்லின் அமைப்பு எப்படி இருக்குமென்று பலரும் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார். படம்: கூகிள் உபயம்.

*******

ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஜாவாவில் ‘வாயாங் குலித்’ (Wayang Kulit) என்ற தோல்பாவைக் கூத்தின் மூலம் இப்படி ஏராளமான மகாபாரதக் கதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதை நடத்துவோர் தத்தம் சொந்தப்பார்வையில் சில அற்புதமான கருத்துகளை கதையினூடே சொல்லிப்போவார்கள்.
‘ஸ்ரீகண்டியின் மந்திரசக்தி வாய்ந்த அம்பால் எப்படி தர்மத்திலிருந்து வழுவாத பீஷ்மரை வீழ்த்த முடிந்தது!’ என்று கேள்வி கேட்டு அவரே அபாரமான பதிலும் சொல்வார்.
‘பீஷ்மரான தேவவிரதர் தாம் தந்த வாக்கை எந்நாளும் மீறாத சத்தியவாழ்க்கை வாழ்ந்தவர்தாம். அவர் அப்படியே இருந்திருந்தால் அம்பையால் அவரை வீழ்த்தியிருக்கவே முடியாது. ஆனால் என்று பீஷ்மர் அதர்மத்தின் பக்கம் துணை போனாரோ அன்றே அவர் வீழ்ச்சி தொடங்கியது. தேவி திரௌபதியை சபை நடுவே துகிலுரிந்ததைப் பார்த்தும் அமைதி காத்தாரே அன்றே அவரைக் கொல்ல தேவி ஸ்ரீகண்டியின் அஸ்திரமான ஹ்ருசாங்கிலிக்கு சக்தி வந்து விட்டது!’
ஸ்ரீகண்டியின் தொன்மக்கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் அவர்களிடை இருந்து வருவது. மத்திய ஜாவாவின் மாஜாபஹித் (Majapahit) அரசில் ஸ்ரீகண்டி சேனை என்று போர்ப்பயிற்சியில் சிறந்த பெண்களின் படையே தொடர்ந்து இருந்திருக்கிறது.
ஒருமுறை மத்திய ஜாவா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது இயற்கை அரசாளும் டியாங் பீடபூமியில் (Dieng Plateau) அமைந்திருக்கும் 1300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாண்டவர்களின் கோயில்களைப் பார்த்தோம். ஸ்ரீகண்டியின் ஜாவானியக் கதைக்கு ஆதாரசாட்சியாய் அங்கே அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்திலேயே தேவி ஸ்ரீகண்டிக்கும் கோயிலைக் கண்டு வியந்து நின்றேன். Candi Srikandi என்றே இக்கோயில் அழைக்கப் படுகிறது.

ஜாவா தீவின் மத்தியப் பகுதியில் Dieng Plateau வில் உள்ள கோயில்கள்
அம்பையின் கதை அங்கே என்றும் உயிர்த்திருக்கும். இன்றும் பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டுமின்றி, மாற்றுப்பாலினக்குழுக்கள் பலவும் – நம்மூரில் அரவானைப்போல் – ஸ்ரீகண்டியின் பெயரில் தங்களை அமைப்பு ரீதியாய் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இப்படி ஓர் அமைப்பு சமீபத்தில் எடுத்த ‘அனக் அனக் ஸ்ரீகண்டி’ (Anak Anak Srikandi – ஸ்ரீகண்டியின் குழந்தைகள்) என்றொரு குறும்படம் உலகத்திரைப்பட விழாவொன்றில் பரிசு வென்ற