வியாழன், 25 டிசம்பர், 2014

நயினாரகரம் மாட்டுச்சந்தை


அழிந்து வரும் பாரம்பரியமிக்க  நயினாரகரம்  மாட்டுச்சந்தை 
           திருநெல்வேலியிலிருந்து 70 கிலோமேட்டார் துரத்தில் தென்காசி நகராட்சியில் இருக்கும் ஒரு அழகிய குக்கிராமம் நயினாரகரம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. திருநெல்வேலிக்கு அல்வா சிறப்பு என்று அனைவரும் அறிந்தது. அதுபோல நயினாரகரம் என்ற கிராமத்தின் சிறப்பு ‘சந்தை’. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை பெற்ற அச்சந்தை திருநெல்வேலி மாவட்டத்திற்கே சிறப்பு என கூறலாம். தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் நயினாரகரம் சந்தையும் ஒன்று. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ள அச்சந்தைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலத்தில் இருந்தும் மக்கள் வந்து பொருட்களை வாங்கியும், விற்றும் செல்வார்கள். 
               சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் கூட இங்கு பொருட்களை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் இப்பொழுது போல எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் கிடைக்கும் என்பது இல்லை. இது மாதிரி சந்தைகளில் தான் மக்கள் தங்களுக்கு தேவையானதை பண்டமாற்று செய்து கொள்வார்கள். இப்பொழுதுதான் மக்களிடம் பணம் மாற்று முறை என்ற பழக்கம் வந்துள்ளது. ஆனால் அந்த காலத்தில் ஒருவருக்கும் அரிசி வேண்டுமென்றால் அவர் தன்னிடம் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் பருப்பு, கோதுமை இல்லை ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொள்வார்கள். நயினாரகரம் சந்தையும் அந்த மாதிரி இயங்கி வந்தது. வாரம் ஒருமுறை பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து மக்கள் கூட்டம் வந்தவண்ணம் இருக்கும். இச்சந்தையில் கிடைக்காத பொருட்கள் கிடையாது. நமக்கு தேவையான அனைத்துமே அங்கு கிடைக்கும்.
சந்தை நடைபெறும் சனிக்கிழமை தோறும் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் வந்தும் போயும் இருப்பார்கள். இச்சந்தையின் மிகப்பெரிய சிறப்பு மாடுகள்.
கரவ மாடுகள், எருமை மாடு என அனைத்து வகை மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மக்கள் அலைமோதுவார்கள். கேரளா, ஆந்திரா மற்றும் பிற  மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான மாடுகளை இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். இச்சந்தையின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வந்தனர். 
நாளடைவில் நாகரீகம் வளர வளர மக்களின் தரமும் உயர்ந்தது. ஆனால் இச்சந்தை தன் அழிவை நோக்கியே சென்றுக்கொண்டிருந்தது. மக்களின் தரம் உயர்ந்தது ஆங்காங்கே நமக்கு தேவையான பொருட்கள் நம் வீட்டின் அருகிலே பெற்றுக்கொள்ளும் வசதியை நாம் இப்பொழுது பெற்றுள்ளோம். முன்னர் போல் யாரும் சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவதில்லை. தற்பொழுது இருக்கும் பொருட்கள் எதற்கும் தரமும் அவ்வளவு இல்லை. விலையும் உயர்ந்ததாக உள்ளது. ஆனால் அக்கால சந்தையில் தரத்திற்கும் ஏற்ற மிகக்குறைந்த விலையில் பொருட்களை வாங்கி மக்கள் பயனடைந்தார்கள். இப்படி பல சிறப்புக் கொண்ட அச்சந்தை தற்போது அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பது  வருத்தமளிக்கிறது.
வாரம் வாரம் சனிக்கிழமை தோறும் சந்தை இயங்கும். அதுவும் இப்பொழுது எல்லாப் பொருட்களும் அங்கு கிடைப்பதில்லை, சனிக்கிழமை தோறும் பிற மாநிலங்களில் மாடுகளை மட்டும் கொண்டு வியாபாரம் செய்து விட்டு செல்வார்கள். இது மாதிரி சந்தை நம் காலத்தில் இல்லை என்பது நமக்கு வருத்தட்டிற்குரியது. அழிந்து வரும் இச்சந்தையின் புகழை நாம் என்றும் மறந்திட முடியாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக