கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.
இங்கே நடக்கும் தவறு என்ன..?
கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை, கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.
யார் செய்கிறார்கள்?
இந்த மாஃபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்- தொண்டு நிறுவனங்கள், சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றுக்கு ஏஜென்ட்களாகச் செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி இடிக்கச்சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குத் துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.
ஏன் செய்கிறார்கள்?
- இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை.
- மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி – கோயில்கள் அழிப்பு
- கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்க மயமாக்கலுக்கு) பாரம்பரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டுப் பெருமுதலாளிகளும்- தொண்டு அமைப்புக்களும்- மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.
- இந்தியாவின் வரலாற்றைத் திரிக்க நினைக்கும் வெளிநாட்டு- உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.
- இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்திச் செல்வோரின் நோக்கமும் அதுவே.
- ஸ்தபதிகளுக்கு, இருப்பதை சீரமைப்பதை விட இடித்துக் கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.
- சில அறங்காவலர்கள்- பெரிய மனிதர்கள், விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோயிலை இடித்து புதிதாகக் கட்ட நன்கொடை அளித்துத் தூண்டுகிறார்கள். கோயில்களை தங்கள் கௌரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.
- பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோயில் சிதைப்புக் கும்பலின் பணத்திற்கு- சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.
எப்படிச் செய்கிறார்கள்?
- முதலில் கோயிலில் அது பின்னம், இது குறை என்று மாற்றங்களைச் சொல்லும் இந்த மாஃபியா குழு, கோயில் குழுவினரை ‘தெய்வ குற்றம்’ என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லும்போது, கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களைச் சொல்லி, புராதனச் சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.
- சில இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
- சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும், தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும் (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும்; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.
- வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.
- கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது, கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.
இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.
சில உதாரணங்கள்:
- தஞ்சை பெரிய கோயில்– கல்வெட்டுக்களும், புராதனச் சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008).
(
http://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)
- திருவொற்றியூர் கோயில் – சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு, கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது (2013).
(
http://www.dinamalar.com/news_detail.asp?id=789444)
- காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் – கோயிலை விளம்பரத் தளமாக மாற்றினார்கள். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடின. கோயில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.
(
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)
- சேவூர் வாலீஸ்வரர் கோவில் – கல்வெட்டுக்கள் சேண்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோயில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.
(
http://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)
- சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதனச் சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று? கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்
http://www.aazham.in/?p=1718
http://chasingaphrodite.com/tag/art-of-the-past/
- சிலைக் கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு. சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Ac
இவை சில உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோகச் சிலைகள் கடத்தப்படுகின்றன. சமீபத்தில் மதுரைக் கோயிலுக்கு சொந்தமான ரூ. 66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோயில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோயில்கள் வரை இந்த மாஃபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.
மக்கள் செய்யவேண்டியது என்ன?
v நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.
v கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.
v சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.
v கோயிலின் தொன்மையான தூண்கள், சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.
v கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது. கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.
v செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திரிபுவனம் ஆலயம்
அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?
- தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோயில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோயில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கோயில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோயிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களைத் தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
- சிலைக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து, வேரோடும்- வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
- கடந்த ஆண்டுகளில் நடந்த கோயில் வேலைகளைக் கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களைக் கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.
- தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதனச் சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும்.
- தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை- கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத் துறை வெளியேறி, ஆன்மிகக் குழு, கோயிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
- புதிய கோயில் பணிகளை, வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மிக அமைப்புக்கள், பக்தர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.
தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்; கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.
அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.